Discoverஎழுநா
எழுநா
Author: Ezhuna
Subscribed: 1Played: 22Subscribe
Share
© Ezhuna
Description
2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.
ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.
ஈழம் சார்ந்து வரலாறு, பண்பாடு, கலை, மானுடவியல், அரங்கியல், மொழியல் போன்ற தமிழியல் ஆய்வுப் பரப்புக்கள் மட்டுமில்லாது பொருளாதாரம், அபிவிருத்தி, சட்டம் போன்ற ஈழம் சார் ஆய்வுப்பரப்புக்களும் எழுநாவின் செயற்பாட்டுப் பரப்புக்களாக அமைகின்றன.
784 Episodes
Reverse
ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.
இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.
மலையகத் தமிழரின் சமூக, அரசியல் விடுதலைக்காகத் தன் வாழ்வின் பெரும்பாகத்தை அர்ப்பணித்த நடேசய்யர் குறித்த ஆய்வுகள் அவரது பங்களிப்பை அறிமுகப்படுத்தல், அவற்றை மதிப்பிடுதல் என்ற தளங்களில் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. இருந்தபோதிலும் அவை குறிப்பிட்ட சில மட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. நடேசய்யரின் மூல ஆவணங்கள் பல கிடைக்கப்பெறாத காலத்தில், கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், சில புதிய மூலங்களைக் கண்டறிந்தும் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால் அவற்றுள் நடேசய்யரின் மொத்தப் பங்களிப்புகளும், அவரின் கருத்தியல் தளத்தில் ஏற்பட்டுவந்த மாற்றங்களும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படாத நிலையே தொடர்கிறது. அந்தவகையில், ஏற்கனவே கிடைக்கப்பட்டுள்ள நூல்களையும் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள நூல்களையும் மதிப்பிடுவதன் மூலம் நடேசய்யரின் பங்களிப்புகளையும், அவர் காலத்து சமூக, அரசியல் அசைவையும் கண்டுகொள்ளவும் நடேசய்யர் பற்றிய ஆய்வுகளில் நிலவும் இடைவெளியை நிரப்பவும் எதிர்கால ஆய்வுகளுக்கான திசைகாட்டல்களை வழங்கவும் ‘கணக்குப் பதிவு நூல் முதல் கதிர்காமம் வரை’ எனும் இத் தொடர் எழுதப்படுகிறது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் – சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றிப் பேசவிழைகின்றது.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.
இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.
‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.
பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நிலவிய நாகரிகம், அவர்களின் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள், பொருளாதார சமூக நிலவரங்கள், வெளிநாட்டு உறவுகள், உறவுநிலைகள், சமய நடவடிக்கைகள் போன்ற அம்சங்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்வதாக அமைகின்றது.
“யாழ்ப்பாணக் குடாநாட்டின் நூலகப் பாரம்பரியம்” என்ற இத்தொடரானது, யாழ்ப்பாணத்தில் புராதன நூலக வரலாறு முதல் நவீன தனியார் நூலக வளர்ச்சி, பொது நூலக வளர்ச்சி, நூலகவியல் கல்வியின் அறிமுகம், நூலகத்துறையில் ஈழத்தமிழர்களின் முன்னோடி முயற்சிகளாக யாழ்ப்பாணத்தில் எழுந்த நூலகவியல்சார் நூல் வெளியீடுகள், நூலகவியல் துறைசார் சஞ்சிகைகளின் வெளியீடுகள், யாழ்ப்பாண கல்வியியல் வரலாற்றில் தடம் பதித்த நூலகங்களின் வரலாறு என்பவை உள்ளிட்ட விடயங்களை பற்றி பேசவிழைகின்றது
நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.
இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.
இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.
ஒரு பிரதேசத்தின் பல்வேறு விடயங்களை கட்டமைப்பதில் அந்தப் பிரதேசத்தின் இயற்கை அம்சங்கள் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் காலநிலை சார்ந்த அம்சங்கள் அந்தப் பிரதேசத்தினுடைய இயற்கையையும் அந்த பிரதேசத்திற்குரிய பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களையும் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கினை வழங்குகின்றது. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய பல்வேறு வகைப்பட்ட விடயங்களை தீர்மானித்ததில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மிகப்பெரிய செல்வாக்கினை பெற்றிருக்கின்றது. வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை சார்ந்த பாரம்பரிய அறிவியல் விடயங்களையும் நவீன விஞ்ஞான ரீதியிலான ஆய்வு சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கியதாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலைப் பண்புகளை முழுமைப்படுத்தி வெளியிடுவதாக ‘பிராந்திய காலநிலையியல் : வடக்குப் பிராந்தியம், இலங்கை‘ எனும் தொடர் அமைகின்றது.
Comments
Top Podcasts
The Best New Comedy Podcast Right Now – June 2024The Best News Podcast Right Now – June 2024The Best New Business Podcast Right Now – June 2024The Best New Sports Podcast Right Now – June 2024The Best New True Crime Podcast Right Now – June 2024The Best New Joe Rogan Experience Podcast Right Now – June 20The Best New Dan Bongino Show Podcast Right Now – June 20The Best New Mark Levin Podcast – June 2024
United States