இன்னொரு உலக ஒழுக்காறு : உலக நாடுகளின் இயக்கச் செல்நெறி | தமிழ் பண்பாடு : ஊற்றுக்களும் ஓட்டங்களும் | கலாநிதி. ந. இரவீந்திரன்
Description
இன்றைய உலக நெருக்கடிக்குள் ரஷ்யாவை மட்டுமன்றிச் சீனாவையும் சேர்த்தே குற்றம் சாட்டுவதையும் காண்கிறோம். ரஷ்ய - உக்ரேன் யுத்தத்துக்கு முன்னரே அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்திய அணி முன்னெடுத்த உலகப் பொருளாதாரச் செயலொழுங்குகள் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்து இருந்த சூழலில், கொரோனாப்பெருந்தொற்று ஏற்பட்டு தனது தலைமேல் பழியை ஏற்றுக்கொண்டது. அந்தக் கொரோனாவை உருவாக்கி பரப்பியது சீனாவே எனும் பிரசாரத்தை அமெரிக்கா மேற்கொண்ட போதிலும், விஞ்ஞானிகளும் உலக சுகாதார அமைப்பினரும் தொடர்ந்து அவ்வகையிலான அறிவீனமான பரப்புரைக்கு இடமளிக்காது முற்றுப்புள்ளி வைத்தனர்.
உலகப் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடு இலங்கையில் மிக அதிகமான அதிர்வினை ஏற்படுத்தி உள்ளது. கிணற்றுத் தவளையாக இருந்துகொண்டு இங்கே தான் மிக மோசம் எனப் பலர் நம்பும் வகையில் , ஊடகப் பரப்புரைகளும் அமைந்துள்ளன. 'உணவுப் பணவீக்கத்தில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது' என்பது இப்போது வீசப்படுகிற பிரசார வெடிகுண்டு.
1970 கள் வரை விடுதலை பெற்ற புதிய தேசங்களில் முதல் வரிசைக்குரிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கை 'மிகக் கேவலமாக கையேந்தும் முதல்நிலை நாடு' எனத் தரந்தாழ்ந்து போக நேர்ந்தது எதனால்? முப்பது வருட உள்நாட்டு, யுத்தத்தின் போது பெறப்பட்ட கடன்களே மிக அதிக அளவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனப் பேசப்பட்டு வருகிற சூழலிலும் இனங்களிடையே நல்லிணக்கம் வளர இயலாதிருப்பது ஏன்?
இந்தியாவில் மேலாதிக்கத் திணை அரசியல் செல்நெறியே உள்ளது. இலங்கையுடன் முரண்பாட்டை கையாள்வதில் தனக்கான மேலாண்மையை முன்னிறுத்தியே அது இயங்குகிறது. முப்பது வருட யுத்தத்தின் பெறுபேறைத் தனக்குச் சாதகமாக்கி இரு ஒப்பந்தங்களை (1987, 2010) செய்து கொண்டது. இலங்கை தனக்கான இறைமையின் பெரும்பகுதியை அந்த ஒப்பந்தங்கள் வாயிலாகத் தாரை வார்த்துவிட்டதை மறந்து ,பூரண இறைமையுள்ள நாடாக எண்ணி இயங்க முற்படுகிறபோது பல்வேறு வழிமுறைகள் மூலம் தலையீடு செய்து வழிக்குக்கொண்டு வரும் கைங்கரியங்களை இந்தியா மேற்கொள்கிறது; இலங்கையில் ஒழுங்கான நிர்வாகச் செயற்பாடு சாத்தியமில்லை என மக்களுக்கு உணர்த்தும் காரியங்களை இந்தியா இன்று கனகச்சிதமாக முன்னெடுத்து வருகிறது. இதன் வாயிலாக எமது இறைமையில் தனக்குரித்தானதாக பங்கெடுத்துக் கொண்டதைப் போல சுதந்திரத்திலும் பகுதிப் பங்கீட்டை இந்தியா கோருகின்றது.