ஒல்லாந்தருக்கு எதிரான சதியும் பூதத்தம்பி கதையும் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை
Description
ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையை 1658 யூன் மாதத்தில் கைப்பற்றிச் சில வாரங்களில், இந்தப் படை நடவடிக்கையில் பங்குகொண்ட பெரும்பாலான ஒல்லாந்தப் படையினர் நாகபட்டினத்தைக் கைப்பற்றுவதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டனர். யாழ்ப்பாணக் கோட்டையின் பாதுகாப்புக்குக் குறைந்த அளவு படையினரே இருந்தனர். முன்னைய அரசில் பணிபுரிந்த போர்த்துக்கேயர் சிலரும் ஒல்லாந்தருக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றினர். 1658 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இவர்களில் ஒரு பகுதியினரும், உள்ளூரைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து ஒல்லாந்தருக்கு எதிராகச் சதித் திட்டம் ஒன்றை வகுத்ததாக பல்தேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தில் வழிபாடு நடைபெறும் நேரத்தில், கோட்டையில் இருந்த எல்லா உயர் அதிகாரிகளையும், காவலர்களையும் கொன்றுவிட்டுக் கோட்டையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே மேற்படி குழுவினரின் திட்டமாக இருந்தது என்றும் அவர் கூறுகின்றார்.