கிழார்களின் வம்ப வேந்தர் | தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும் | ந. இரவீந்திரன்
Description
கி. மு. 3ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற சேரர், பாண்டியர், சோழர் எனும் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு எழுச்சிகளுடனேயே தமிழர் வரலாற்றுத் தொடக்கம் ஏற்பட்டதான ஆய்வு முடிவுகள் நிலைபேறுடையனவாக நிலவிவந்தன. மூவேந்தர் எழுச்சியுடன் பேரரசுகள் தோன்றுவதில் வாய்மொழி இலக்கியத்தின் பங்குப் பாத்திரம் குறித்த பேராசிரியர் க. கைலாசபதியின் ‘வீரயுகப் பாடல்கள்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடு பெரும் தாக்கத்தை விளைவித்தது. மூவேந்தர்கள் பற்றி அசோகனின் கல்வெட்டுகள் குறிப்பிட்ட நிலையில் இங்கு கண்டறியப்பட்ட எழுத்துகளும் அசோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது.
சோகச் சக்கரவர்த்திக்குப் பின்னரானது என்ற கருத்தும் வலுத்திருந்தது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அசோகனுக்கு முந்திய ‘தமிழி எழுத்துகள்’ தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் கிடைத்த பல்வேறு கல்வெட்டுகள் வாயிலாக கண்டறியப்பட்ட பின்னர் புதிய சிந்தனைகள் எழுந்தன.
கல்வெட்டுகளுக்கு அப்பால் பானையோடுகளில் தமிழ்ப் பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்ட போது வரலாற்றுத் தொடக்கம் பற்றிய மறுவாசிப்புகள் அவசியப்பட்டன. கைத்தொழில் விருத்திப் பொருட்கள் உட்பட கி.மு. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழி எழுத்தில் பானையோடுகளைத் தமிழர் சமூகம் கொண்டிருந்தமையைக் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தியதனை பேராசிரியர் க. ராசன் பேசுபொருளாக்கி இருந்தார்.
வாய்மொழி இலக்கிய எழுச்சி வாயிலாக வரலாற்றுத் தொடக்கம் - முன்னரே புழக்கத்தில் இருந்த எழுத்துப் பயன்பாடு என்ற இரு முனை விவகாரங்களுக்கு உரிய முரண் பற்றிய தெளிவை எட்டும் போது தமிழர் தனித்துவத்துக்கான அடிப்படையை விளங்கிக்கொள்வோம்.
மறுக்கவியலாத தொல்லியல் சான்றாக கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் தமிழி எழுத்தாக்கம் உருவாகத் தொடங்கி விருத்திபெற்று வந்ததனை வைத்து ’வீரயுக இலக்கியம்’ வாய்மொழிப் பண்புடையது என்ற கருத்தாக்கத்தை மறுப்பவர்களது வாதம் வலுப்படுவதாக எண்ணுகிறவர்களும் உள்ளனர்.
கொடுமணலில் கிடைத்த பொருட்கள் கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் வீறுடன் தமிழக வரலாற்று எழுச்சி ஏறுதிசையில் வேகமாக இயங்கி வந்தமையைக் காட்டியிருந்த போதிலும் அவற்றுக்குத் தளமாக அமையத்தக்க கட்டுமானங்கள் போதியளவில் கண்டறியப்படவில்லை. வைகைக் கரை நகரப் பண்பாட்டை வெளிப்படுத்திய கீழடி அகழ்வாய்வுகள் பலவகைத் தெளிவுகளை வந்தடைய உதவின.
கி.மு. 7ஆம் நூற்றாண்டு எழுச்சியுறத் தொடங்கிய நகரக் கட்டுமானமும் எழுத்துருவாக்கமும் ஒரு நூற்றாண்டின் பின்னர் செழுமையுடன் விருத்திபெற்று அமைந்தமையைக் கீழடியில் கண்டறியப்பட்ட கட்டுமானங்களும் அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களும் எடுத்துக் காட்டுகின்றன.
கி.மு. ஆயிரமாம் ஆண்டில் இரும்புப் பயன்பாடு பரவலானதுடன் தமிழகத்திலேயே வலுவான உருக்கு உற்பத்தி சாத்தியப்பட்டதன் விளைவாகத் தான் தமிழகத்தின் எழுச்சி வீறுகொள்ளத் தொடங்கியது. பின்னரான நாலைந்து நூற்றாண்டுகளில் ஏற்பட்டு வந்த விருத்தியையே கொடுமணல், கீழடி, சிவகளை போன்ற பல்வேறு இடங்களிலான தொல்லியல் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.