கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : தமிழ் இலக்கியங்கள் | ஈழத்துக் கீழைக்கரை - ஒரு வரலாற்றுப் பார்வை | விவேகானந்தராஜா துலாஞ்சனன்
Description
இலங்கையில் எழுந்த தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் கீழைக்கரையின் வரலாறு, பண்பாடு பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாண வைபவ மாலை, வையாபாடல், கைலாயமாலை, கோணேசர் கல்வெட்டு, கைலாச புராணம், திரிகோணாசல புராணம், மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன முக்கியமானவை[1]. இவற்றோடு எழுந்த பெரியவளமைப்பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், இராசமுறை ஆகிய நூல்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை.
இலங்கையில் கிடைத்த இலக்கியங்களில் வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாணவைபவ மாலை என்பன வட இலங்கையில் உருவானவை. கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசல புராணம் என்பன திருக்கோணமலையில் தோன்றியவை. மட்டக்களப்புப் பூர்வசரித்திரம், நாடுகாட்டுப்பரவணி என்பன மட்டக்களப்புப் பிரதேசத்தில் தோன்றியவை.
இன்று கிடைக்கும் வட இலங்கை இலக்கியங்களில் மிகப்பழையதாகக் கருதப்படுவது வையாபாடல். இப்பெயர் அதன் ஆசிரியரான வையாபுரிப் புலவர் பெயரால் உண்டானது[2]. இந்நூலுக்கு நூலாசிரியர் சூட்டியபெயர் “இலங்கை மண்டலக் காதை” என்பதாகும். வையாபாடலிலுள்ள அகச்சான்றைக் கொண்டு வையாபுரிப் புலவர் யாழ்ப்பாண அரசனான முதலாம் சங்கிலிக்கும் பரராசசேகரனுக்கும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்பர் (நடராசா 1980:4-8). பொதுவாக இந்நூல் முதலாம் சங்கிலியின் காலத்தில் எழுந்தது (1519-61)
யாழ்ப்பாண வைபவ மாலையானது, பதினேழாம் நூற்றாண்டில் மயில்வாகனப்புலவரால் எழுதப்பட்டது. யாழ்ப்பாணத்தின் வரலாற்றை உரைநடை வடிவிலும் செய்யுள் வடிவிலும் பாடுகின்ற இவ்விலக்கியம் மக்கறூன் எனும் ஒல்லாந்து ஆளுநரின் காலத்தில் பாடப்பட்டதாக நம்பப்படுகிறது (நடராசா 1980:2-3). இந்நூலை எழுதுவதற்கு வையாபாடல், கைலாயமாலை உள்ளிட்ட நூல்கள் உசாத்துணையாக இருந்தன என்று குறிப்புள்ளதால், இந்நூல் அவற்றுக்குக் காலத்தால் பிற்பட்டது (ஞானப்பிரகாசர், 1928:1-3).
இலங்கையின் தமிழ் வரலாற்று இலக்கியங்களிலும் தலபுராண இலக்கியங்களிலும் மிகப்பழையது கைலாசபுராணம் ஆகும் பொதுவழக்கில் இது இன்று தட்சிண கைலாய புராணம் என்றே அழைக்கப்படுகிறது. இப்புராணம் யாழ்ப்பாணத்தின் ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவனான செகராசசேகரனால் பாடப்பட்டதென்றும், அவன் பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1350கள்) வாழ்ந்தவன் என்றும், அவனே செகராசசேகரமாலை எனும் சோதிடநூல், செகராசசேகரம் எனும் வைத்தியநூல் என்பனவற்றில் புகழப்படுபவன் என்றும் விரிவாக ஆராய்ந்து நிறுவுகிறார் பேராசிரியர்.சி.பத்மநாதன் (1995:ix - xxiv). கைலாசபுராணத்தில் வருகின்ற குளக்கோட்டன், கஜபாகு ஆகிய மன்னர்கள் பற்றிய செய்திகள், சிங்கள – பாளி இலக்கியங்களின் பின்னணியில் கீழைக்கரை வரலாற்றோடு இணைத்து ஆராயத்தக்கவை. குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தைப் புதிதாக அமைக்கவில்லை, திருத்தியமைத்தான் என்று கைலாசபுராணம் கூறும் செய்தி ஊன்றி நோக்கத்தக்க குறிப்பாகும்.
இது இலங்கையில் தோன்றிய் “கல்வெட்டு” எனும் இலக்கிய மரபில் உருவான முதல் நூலாகக் கருதப்படுகிறது. உரைநடையும் செய்யுளும் கலந்தே காணப்படும் இந்நூல், கைலாசபுராணத்தையும் ஏனைய மரபுகளையும் பின்பற்றி 17ஆம் நூற்றாண்டில் எழுந்தது என்று ஊகிப்பார் சி.பத்மநாதன். பெரும்பாலும் திருக்கோணேச்சரம் இடித்தழிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக தம்பலகாமத்தில் ஆதிகோணேச்சரம் அமைக்கப்பட்ட பின்னரே இக்கோணேசர் கல்வெட்டு பாடப்பட்டிருக்கவேண்டும். கோணேசர் கல்வெட்டிலும் குளக்கோட்டன் கல்வெட்டு கவிராச வரோதயரால் பாடப்பட்டதென்றும், கயவாகு கல்வெட்டும் உரைநடையில் அமைந்த பகுதியும் பின்னாளில் வேறு சிலரால் எழுதி இணைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஊகிக்கப்படுகிறது (வடிவேல், 1993:14-17).