கோல்புரூக் – கமரூன் அரசியல் சீர்திருத்தம் | இலங்கையின் இனவாத அரசியல்- ஒரு வரலாற்றுப் பார்வை | பி.ஏ. காதர்
Description
1830 களின் முற்பகுதியில், பிரித்தானியர்கள் இலங்கையில் தங்கள் நிலையை உறுதிப்படுத்துவதை கிட்டத்தட்ட பூர்த்திசெய்துவிட்டனர். ஐரோப்பாவிலும் உலக அரங்கிலும் அவர்களுக்கு பெரிய சவால்கள் இருக்கவில்லை. எனவே தீவின் அரசியல் ஸ்திரத்தன்மையிலும் பொருளாதார இலாபத்தைப் பாதுகாப்பதிலும் அவர்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஜெர்மி பெந்தம் (Jeremy Bentham) மற்றும் ஜேம்ஸ் மில் (James Mill) ஆகியோரால் அப்போது முன்வைக்கப்பட்ட சீர்திருத்தவாத அரசியல் சித்தாந்தத்தின் தாக்கத்தால் ஒரு புதிய சிந்தனை அலை உருவாகியிருந்தது. இது பயன்பாட்டுவாதம் (utilitarianism) என்று அறியப்பட்டது.
இலங்கைக்கு வந்த சேர் .வில்லியம் கோல்புரூக் மற்றும் சார்ல்ஸ் கமரூன் (Sir William Colebrooke and Charles Cameron) தலைமையிலான குழுவினர் தமது ஆய்வின் பின்னர் 1832இல் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அது இலங்கைக் காலனியை ஆளுவதற்கு ஒரு புதிய வடிவத்தை உருவாக்கியது. கோல்புரூக் சீர்திருத்தம், கட்டாய உழைப்பு (இராஜகாரிய) மற்றும் அரசாங்க ஏகபோகங்களுக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும், சிவில் சேவையானது இனம் அல்லது சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும் எனவும், நீதித்துறை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் சட்டம் ஐரோப்பியர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் சமனாக இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இலங்கையில் ஆளுநர்கள் பொருளாதாரத் துறையிலும் பாதுகாப்புத் துறையிலும் பாதைகள் அமைப்பதிலும் அடைந்த வெற்றி குறித்து லண்டன் காலனியல் அலுவலகம் திருப்தி கண்ட போதிலும், ஆளுநர் நிர்வாகம் நடத்தும் விதம் குறித்து திருப்தி காணவில்லை. சட்டமன்றம் மற்றும் நிர்வாக அதிகாரம் அனைத்தும் ஆளுநரிடம் குவிந்திருந்தன. அவர் ஒரு ஆலோசனைக் குழுவை வைத்திருந்தார் - அக்குழு அவரால் நியமிக்கப்பட்ட ஒன்று - ஆனால் அதன் ஆலோசனையைப் பெறவோ அதற்கு கட்டுப்படவோ அவர் கடமைப்பட்டிருக்கவில்லை.
இலங்கை சிவில் சேவையை இலங்கையர்களுக்காக திறப்பதற்கு ஆங்கிலக் கல்விக்கு புதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய நிலைமையை இந்த ஆணைக்குழு கட்டாயப்படுத்தியது.
கலிபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தங்கம் தேடி அலையும் வேட்கை (Gold Rushes) போன்று ஒரு "கோப்பி மேனியா" (Coffee Mania) சிறிது காலத்திற்குள் இலங்கையில் தொடங்கியது. கே. எம். டி சில்வாவின் கூற்றுப்படி, பிரித்தானிய பவுண்ட் 5 மில்லியன் முதலீட்டிளவிலான கோப்பி இலங்கையில் கொட்டப்பட்டது.
ஆக்லாண்ட், பாய்ட் & கம்பெனி (Ackland, Boyd & Company) கோப்பித் தோட்டங்களை உருவாக்கத் தொடங்கியது. எனினும் சரியான விஞ்ஞான முறை பயன்படுத்தப்படாத காரணத்தால் கோப்பி பெருந்தோட்டம் இரண்டு தசாப்தங்கள் எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. இந்த நிலைமையை மாற்றிய பெருமை ராபர்ட் பாய்ட் டைட்லர் (Robert Boyd Tytler) என்ற ஸ்காட்லாந்துகாரரையே சாரும். ஜமேக்கா கோப்பி பெருந்தோட்டங்களில் பணிபுரிந்த அனுபவமுள்ள இவரை ஆக்லாண்ட், பாய்ட் & கம்பெனி 1937இல் சேவையில் அமர்த்தியது. இவர் இலங்கையில் மேற்கிந்திய உற்பத்தி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம், “இலங்கை தோட்டத்துரைமார்களின் தந்தை” என்று கருதப்பட்டார்.
1846 தொடக்கம் 1948 வரை நிலவிய பொருளாதார நெருக்கடி கோப்பிப்பெருந்தோட்டத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி பீதியை ஏற்படுத்தியது. சுமார் பத்தில் ஒரு கோப்பித்தோட்டங்கள் நட்டத்தால் கைவிடப்பட்டன.
1848 வரை அனைத்து கோப்பித்தோட்டங்களும் பெரதெனியவைச் சுற்றி 30 மைல்களுக்குள் சிங்கள கிராமங்களுக்கும் சேனைகளுக்கும் அண்மையில் அமைந்திருந்தன. 1700 அடிக்கு மேற்பட்ட பிரதேசங்களில் கோப்பி செழிப்பாக வளர்வது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கோப்பித்தோட்டங்கள் 1850களில் உயர்மலைப்பிரதேசத்தின் சிவனொளிபாதமலை அடிவாரத்தின் டிம்புள்ள பகுதிக்கும் ஊவா பிரதேசத்திலுள்ள அப்புத்தளை பகுதிகளுக்கும் சப்பரகமுவ பகுதிகளுக்கும் நகர்ந்தன