சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்கள் | வீரகத்தி தனபாலசிங்கம்
Description
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்தமாதம் சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமும் இணையவெளி பாதுகாப்புச் சட்ட மூலமுமே அவையாகும்.
இரு சட்டமூலங்களுமே பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்த போதிலும், இணையவெளி பாதுகாப்புச் சட்டமூலத்தை மாத்திரம் கடந்த வாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
2.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் மார்ச் மாதத்தில் தங்களால் முன்வைக்கப்பட்ட அவதானங்களை அரசாங்கம் கருத்தில் எடுத்து புதிய சட்டமூலத்தை வரைந்ததாக தெரியவில்லை என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
மீண்டும் கடுமையான விமர்சனங்கள் வெளிக்கிளம்பியதை அடுத்தே புதிய சட்டமூலத்தை கடந்தவாரம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தவிர்த்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீண்டும் அது மீளாய்வுக் குட்படுத்தப்படுமா என்பது முக்கியமான கேள்வி. அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின்போதே அதை தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைப் போன்றே இணையவெளி பாதுகாப்பு சட்டமூலமும் பொதுவெளியில் பெரும் விவாதத்தை மூளவைத்திருக்கிறது. சமூக ஊடகங்களை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக்கொண்டே இந்த சட்டமூலத்தைக் கொண்டுவந்திருப்பதாக அரஙாங்கம் கூறுகின்றபோதிலும் அது இணையத்தை அரசியற் தொடர்பாடல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பாரதூரமான ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்று எதிரணி அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் எச்சரிக்கை செய்கின்றன.