தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress) : நிரோமி டீ ஸொய்ஷாவினது நினைவுக் குறிப்புகள் | இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள் | இளங்கோ
Description
ஈழத்தில் போர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உக்கிரமாக நடந்திருக்கின்றது. அது அங்கிருந்த அனைத்து மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதித்திருக்கின்றது. இப்போது யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. போர் ஒரு கொடுங்கனவாய் மக்களின் மனதில் இருந்து மறக்கடிக்கப்பட்டிருந்தாலும், அதன் நிமித்தம் ஏற்பட்ட உடல்/உள வடுக்கள் இன்னும் இல்லாமல் போகவில்லை. இனங்களிடையே நல்லிணக்கம் மட்டுமில்லை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆற்றுப்படுத்தல்கள், உதவிகள் கூட போரால் வெற்றி கொள்ளப்பட்ட அதிகாரத் தரப்பால் நிகழ்த்தப்படவில்லை. இன்னுமின்னும் இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு இனங்களும் துவிதங்களாகப் பிரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்துப் போர்ச்சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட பனுவல்களை முன்வைத்து வாசிப்புச் செய்யப்படுகின்ற ஒரு தொடராக ‘இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்’ அமைகின்றது.