தமிழ் குடும்பத் தலைவன் குட்டன் பற்றிய சேருவில கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்
Description
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் நகரின் தெற்கில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள சேருவில என்னுமிடத்தில் இக் கல்வெட்டு காணப்படுகிறது. சேறுவில்லு எனும் பெயரே செருவில என திரிபடைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்விடத்தைச் சுற்றி சேறு நிறைந்த பல வில்லுக் குளங்கள் இருந்ததாகவும், இதன் காரணமாக இப்பெயர் உருவானதாகவும் தெரிகிறது.
பண்டைய காலத்தில் இது “சேறுநகரம்” எனப் பெயர் பெற்று விளங்கியது. சிங்கள மொழியில் இது “சேருநுவர ராஜதானிய” என அழைக்கப்பட்டது. இது ஒரு நாக இராச்சியமாகும். தேவநம்பியதீசன் இலங்கையை ஆட்சி செய்த பொது ஆண்டுக்கு முன்(பொ. ஆ. மு) 307 - 267 வரையான காலப்பகுதியில் அவனது தம்பியான மகாநாகன் தெற்கில் இருந்த மாகமை இராச்சியத்தை ஆட்சி செய்து வந்தான். நாகவழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவன் சேருநகர இராச்சியத்திலும் நாகவழிபாட்டை நிலை நாட்டினான்.