தேசிய இனப் பிரச்சினையும் இலங்கையின் இடதுசாரி இயக்கமும் - பகுதி 3 | ஆங்கில மூலம் : குமாரி ஜயவர்த்தன | தமிழில் : கந்தையா சண்முகலிங்கம்
Description
1930 களில் முதற்தடவையாக கொழும்பு நகரின் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினரான மலையாளிகளுக்கு எதிரான இனவாத கூக்குரலை தொடக்கினர். ஒழுங்கமைக்கப்பட்ட வடிவத்தில் எழுந்த இந்த இனவாத எதிர்ப்பை இடதுசாரி இயக்கம் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.அக்காலத்தின் பொருளாதார மந்தம் வேலையின்மையை அதிகரித்ததால் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுந்தன. அந்நியர்கள் 'மண்ணின் புதல்வர்களான' சிங்களவர்களின் வேலைகள், வர்த்தக முயற்சிகள் என்பனவற்றை தட்டிப் பறிப்பதாகவும் வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இந்தியத் தொழிலாளர்கள் தமது கூலி, வேலைத்தள நிலைமைகள் முதலியனவற்றிற்காகவும், வாக்குரிமை போன்ற அரசியல் உரிமைகளுக்காகவும் போராடுவதற்கு இடதுசாரிகள் உதவத் தொடங்கினர். சிங்கள முதலாளி வர்க்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை மறுப்பதில் முனைப்புடன் செயற்பட்டது.அதற்கு தமிழ், முஸ்லிம் முதலாளி வர்க்கங்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உள்ளூராட்சி மட்டத்திலும் சட்டசபை தேர்தல்களின் போதும் வாக்குரிமையை வழங்கக் கூடாது என்பதில் சிங்கள முதலாளிவகுப்பு உறுதியாக இருந்தது.இடதுசாரிகள் தேசியம் பற்றிய ஏற்றுக்கொள்ளபட்ட வரையறைகளை மீறிச் சென்றதற்கு இன்னொரு உதாரணமாக தேசியக் கொடி என்ற விடயத்தைக் குறிப்பிடலாம். தேசியக் கொடி 'நாட்டுப்பற்று', தேசியவாதம் போன்ற உணர்வுகளை உடையவர்களுக்கு மனஎழுச்சியை தூண்டும் விடயமாகும்.இலங்கை சுதந்திரம் அடைந்தபோது ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியக் கொடி ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. அவ்வேளை சிங்களவர் தமது சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கவேண்டும் என்று அழுங்குப்பிடியாக வாதாடினர். சிறுபான்மை இனத்தவர்கள் இதற்கு இணங்கவில்லை.