தேயும் ஈழத் தமிழ்மொழி | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
சந்தேகம் இல்லாமல் பண்பாட்டின் ஏனைய அலகுகள் யாவையும் போல பேசும் மொழியும் ஒரு மாறும் பொதுமைதான். ஆனால், அண்மைய ஒரு தசாப்த காலமாக ஈழத் தமிழ் மொழி சென்று கொண்டிருக்கும் மாறு திசையும் – அதன் வேகமும் – அந்த மாற்றத்தின் காரணங்களும் அதன் காவிகளும் – அது தொடர்பில் எம்மிடமுள்ள அசட்டையும் பண்பாட்டு நோக்கில் வேதனை தருமொன்றாக இருக்கிறது.
இன்று வரைக்கும் தமிழ் நாட்டில் பலரிடம் ‘ஈழத்தமிழ் மொழி உயர்வானது’ – ‘கலப்பற்றது அல்லது ஒப்பீட்டளவில் கலப்பற்ற நல்ல தமிழை ஈழத்தமிழர்கள் பேசுகிறார்கள்’ என்ற பலமான ஒரு ஜனரஞ்சக நம்பிக்கை உண்டு. மொழியல் ரீதியாக யோசித்தால் மேற்படி நம்பிக்கைகள் அதிகம் அறிவியல் பூர்வமானவை அல்ல. ஆனால் நிச்சயமாக ஆங்கிலத்தை அதிகம் தமிழுக்குள் இட்டுப் பேசுதல் அல்லது ஆங்கிலத்தை தமிழ்த்தனமாகப் தமிழோடு கலந்து பேசுதல் என்ற நிலைவரம் ஈழத்தமிழ் மொழிப்பயல்வுள் ஒப்பீட்டளவிற் குறைவுதான்.
எந்த ஒரு மொழியும் கலப்பற்றது – பேச்சு வழக்காற்று மாற்றங்களும் – கிளைகளும் அற்றவை எனப் பேசுவது மொழியின் வரலாற்றை மறுப்பதும், அதனியல்பைப் புரிந்து கொள்ளாததன் விளைவாகவும் மட்டுமே அமையும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தொல்காப்பியம் ‘திசைமொழிகள்’ பற்றிப் பேசுகிறது. போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்த மொழிச் சொற்கள் பலவற்றை தமிழ் என்று நினைத்தே பல நூற்றாண்டு காலமாகக் கையாண்டுவருகிறோம்.