புராதனமான காஞ்சிரமோடை, ‘பரராசசேகரன் அணை’ எல்லைப் பிரதேசங்களும் பண்டிதர் க. சச்சிதானந்தனின் 'யாழ்ப்பாணக் காவியமும் | நவரத்தினம் கிாிதரன்
Description
காஞ்சிரமோடை என்னும் இப்பகுதியை நான் அறியக் காரணமாகவிருந்தது எண்பதுகளில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் பொறுப்பேற்று நடத்திய காந்தியத்தின் 'நாவலர் பண்ணைத் தன்னார்வத் திட்டம்’ ஆகும். நாவலர் பண்ணையில் மலையகத்திலிருந்து 77 இனக்கலவரத்தில் அகதிகளாக வந்திருந்த மக்களைக் காந்தியம் அமைப்பு குடியேற்றியிருந்தது.
நாவலர் பண்ணைக்கும், மருதோடைக்குமிடையில் அமைந்திருக்கும் காஞ்சிரமோடை என்னும் பகுதி அப்போது காடாகவிருந்தது. மருதோடை வரை மட்டுமே பஸ் செல்லும். அங்கிருந்து பண்ணைக்கு மூன்று மைல்கள் வரையில் நடக்க வேண்டும். பண்ணைவாசிகள் அங்கிருந்து நடந்தே பண்ணைக்குச் செல்ல வேண்டும். இத்தூரத்தைக் குறைப்பதற்காக காஞ்சிரமோடைக் காட்டினூடு பாதை அமைப்பதும் அத் தன்னார்வத் திட்டத்தின் ஓரம்சம்.
சபுமல்குமாரயாவிடம் (செண்பகப்பெருமாள்) கனகசூரிய சிங்கையாரியான் ஆட்சியை இழந்துவிடவே, அவனது குமாரனான பரராசசேகரன் காஞ்சிரமோடையை உள்ளடக்கிய வன்னிப் பகுதியில் மறைந்திருந்து, இழந்த யாழ்ப்பாண இராச்சியத்தை மீளக் கைப்பற்றுவதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாக பண்டிதர் க. சச்சிதானந்தனின் 'யாழ்ப்பாணக் காவியம்' விபரிக்கின்றது.
அங்கிருக்கும் நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் பிரமாண்டமானவை என்று கூறும் பண்டிதர் க. சச்சிதானந்தன் அப்பகுதியில் காணப்படும் நீர்வீழ்ச்சியின் அழகையும் மனத்தைத்தொடுமாறு வர்ணித்திருப்பார். அந்நீர்வீழ்ச்சியின் எழுச்சியே அவர் யாழ்ப்பாணக் காவியம் எழுதியதற்குத் தன்னைத் தூண்டியது என்று குறிப்பிடுவார்.
இந்த அணையினை வண்ணாத்திப்பாலமென்றும் அழைக்கும் விடயத்தைப் புறோகியர் என்பவரின் குறிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள முடியும் தகவலையும், இப்பிரதேசம் பற்றிய பேராசிரியர் கா. இந்திரபாலாவின் ஆய்வுகள் பற்றிய விபரங்களையும் பண்டிதரின் மேற்படி கட்டுரை தருகின்றது.
இக் காஞ்சிரமோடை பகுதி பற்றியும், இப் பிரதேசத்தில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பற்றியும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். வரலாறு மற்றும் தொல்லியற் துறையில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய பகுதி காஞ்சிரமோடைப் பிரதேசம்.