பெண்களும் மரபுரிமைகளும்: எழுதப்படாத பக்கங்கள் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
பால்நிலை அசமந்தம், ஆண்முதன்மை ஆகிய சமூக பண்பாட்டு நிலவரங்கள் பலவேளைகளில் சமூக இயக்கத்தில் பெண்களது செயற்பாடுகள், பங்களிப்புக்கள், தனித்துவங்களை அடையாளப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. இதனால், பெண்கள் உட்பட்ட சிறுபான்மைக் குழுக்களது தனியடையாளங்கள், வரலாற்று வகிபாகங்கள் என்பன சமூக பண்பாட்டு வரலாறுகளில் தொடர்ச்சியாக விடுபட்ட – எழுதப்படாத பக்கங்களாகவே உள்ளன.
இந்த நிலைமையானது மரபுரிமைகள் பற்றிய எழுத்துக்களில் மேலோங்கியுள்ள மேட்டுக்குடிமைத் (elitism) தன்மையை ஒத்த இன்னொரு பிரச்சினைக்குரிய அம்சமாகும். அவ்வகையில் பால்நிலைப்பட்ட அசமந்தமானது மரபுரிமை எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகளுள் மறைந்து காணப்படுகிற விவாதத்திற்குரிய மற்றொரு விடயமாகும். இந்தவகையில் பெண்கள் உட்பட்ட சிறுபான்மையினரை வரலாற்றிற் கண்டுகொள்ளாமல் விடுதல் என்பது சாதாரணமான ஒன்றாக நியமநிலைப்பட்ட (normalization), இயல்பானதொரு போக்காக சமூக பண்பாட்டுக் களத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இது பண்பாட்டியக்கத்தின் கண்ணுக்கு புலப்படாத மேலாதிக்கம் அல்லது பண்பாட்டு அரசியலின் விளைவுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.