வன்செயல் மரபுரிமையும் ஈழத்தமிழர்களும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
அனைத்து வகைப்பட்ட போர்கள், இனவழிப்புக்கள், சர்வாதிகாரம், காலனியங்கள் முதலியவற்றைப் பிரதிபலிக்கும் வெளிப்பாடுகளை மரபுரிமையின் பகுதியாகக் கொள்ளும் போக்கு முக்கியமானதாகும். இவற்றை இன்று ‘வன்செயல் மரபுரிமை’ (violence heritage) என்ற பெயரால் இப்புதிய பார்வைகள் சுட்டுகின்றன. இவை இருண்ட, எதிர்மறையான, வலிமிகுந்த, அதிருப்தி நிறைந்த, கடினமான நிலைமைகளது வாழும் சாட்சியங்களாகப் பொதுவாக வரையறைக்கப்படுகின்றன.
இதேசமயம் விமர்சன ரீதியான அகழ்வாய்வுச் செயற்பாட்டாளர்கள் (critical archeologist), பண்பாட்டு மற்றும் மரபுரிமை பயிலுனர்கள் எவ்வாறு அமைதியான மரபுரிமைக்களங்கள், மரபுரிமைச்சின்னங்கள், தொட்டுணரமுடியா பண்பாட்டுச் (intangible cultural heritage) செயற்பாடுகள் முதலியன அரசியல் ரீதியான இடையீடுகளால் இறுதியில் வன்செயல் மரபுரிமைக்களமாகின்றன என்பது பற்றியும் கவனஞ் செலுத்துகிறார்கள்.
வன்செயல்கள் பொருள் (material) ஊடாக அல்லது பொருளாக நடைமுறையில் மாற்றீடு செய்யப்படுகின்றன. பொதுவாக சண்டைக்களங்கள், சித்திரவதைக் கூடங்கள், நினைவுச்சின்னங்கள், சிறைகள், மனிதப்புதைகுழிகள், அழிப்பிடங்கள், சுற்றாடல் - நிலவுரு மற்றும் கட்டடச் சிதைப்புக்கள், அகதிமுகாம்கள், இணைச்சேதப் (Collateral damage) பரப்புக்கள் முதலிய பலவற்றை உள்ளடக்கியதாக வன்செயல் மரபுரிமை காணப்படும்.