வரலாறு மற்றும் இலக்கியப் பதிவுகளில் நாகநாடும் நாகர்களும் - பகுதி 1 | பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம் | சிவ. தியாகராஜா
Description
யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ எனும் இக்கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பவற்றின் பரந்த காட்சிப் பதிவாக விளங்கும்.