சாபம் கொடுத்திட லாமோ ? - விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால் சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். ராமதேவர் பாடல்
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியர்
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே முக்காலைக் காணாமல் என் கண்ணம்மா முழுதும் தவிக்கிறண்டி! அழுகண்ணர் பாடல்
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச் சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன் வேகாத காலறியேன் விதிமோச மானேனடி நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா! நொடியில்மெழு கானேனடி அழுகண்ணர் சித்தர்
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள். பொய்யென்று சொல்லாதே அகப்பேய் போக்கு வரத்துதானே மெய்யென்று சொன்னவர்கள் அகப்பேய் வீடு பெறலாமே. அகப்பேய் சித்தர்
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித் தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா வாழ்வெனக்கு வாராதோ அழுகண்ணி சித்தர்
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே ஔவையார் பாடல்
அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம் அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்; பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்; பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்; மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு; சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. வால்மீகர் பாடல்
ஊணியதோர் ஓங்காரம் மேலுமுண்டே உத்தமனே சீருண்டே யூணிப்பாரே ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும் ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கிநிற்கும் ஏணியா யிருக்குமடா அஞ்சுவீடே ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப்பாரு தோணிபோற் காணுமடா அந்தவீடு சொல்லாதே ஒருவருக்குந்துரந்திட்டேனே. அகத்தியர் பாடல்
அறிவிலே ப பிறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர், நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர், உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும் அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே? சிவவாக்கியர் பாடல்
சொல்லுகிறேன் வாருதிபோற் கபநீர்வீழும் சோதிக்கி லண்ணாக்கிற் குறியைக்கேளு மல்லுகிறேன் சுழிமுனையின் ராகுகேது மைந்தனே சங்கொடுசக் கரம்போல்நிற்கும் அல்லுகிறேன் பேருரவி மதிதானென்பார் ஆச்சரிய மிடையின்னா யமர்ந்தநாக்கு கொல்லுகிறே னென்றுசொல் ஜனங்களைத்தான் கூட்டியல்லோ கபத்தையுள்ளே வளர்க்குந்தானே. சட்டை நாதர் பாடல்
உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே; அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்; கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி; கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு, துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே. அகத்தியர் பாடல்
காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக் கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்; பூணுகின்ற இடைகலையில் பம்பரம்போ லாடும் பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும் ஆணவங்களான வெல்லா மழிந்து போகும் பத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்; ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்; ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே. அகத்தியர் பாடல்
சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்; அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்; அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி; உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்; ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று; நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா! நாதர்களி லிதையாரும் பாடார் காணே! அகத்தியர் பாடல்
துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்; துரியமாய் நடுநிலையை யூணிப் பாராய்; அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்; உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும் நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா! நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே. அகத்தியர் பாடல்
ஆணவத் தால்வந்த காயம் அதில் ஐவரிருந்து தொழில் செய்யும் ஞாயம் காணவ மாம்போகு மாயம் நன்றாய்க் கைகண்ட சூத்திரம் சொன்னேன் உபாயம். மூடர் உறவு பிடியாதே நாரி மோக விகாரத்தால் நீ மடியாதே ஆடம் பரம் படியாதே-ஞான அமுதம் இருக்க விஷம் குடியாதே. மலை சித்தர்
தாண்டவமா யங்குனின்று விளையாடுங் கூத்தை சந்ததமும் விலகாமல் பிசகாமற்றான் தூண்டி லல்லோ தீபவொளி ஜோதிகாணுந் தூண்டாமல் தூண்டுவது சுழினைதானே நந்தி தேவர் பாடல்
பேசினதால் வருவதென்ன பொருளையெல்லாம் பிதற்றினதால் பலித்திடுமோ பேயேசொல்லு மாசிமறு வில்லாத நிலைமையுள்ள மனதைனெடு நாட்பழக்கத் தாலேகண்டு தேசியென்ற குதிரைவழி நடத்துமார்க்கஞ் செப்புவாய் ஞானமென்ற போதந்தன்னை வீசிவிளை யாடுகின்ற காலம்பார்த்து விளங்கவே ரவிமதியின் விபரஞ்சொல்லே. நந்தி தேவர் பாடல்
பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப் புகழான ரிஷிகளெல்லாஞ் சித்த ரென்பார் தள்ளையென்றா லவர்தாமூலரிடம் போன சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞான வீதி கொடிதான சிலம்பொலியைப் கேட்டு மீண்டார் பிள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சே. அகத்தியர்
ஊணுதற்கு வாசிகொண்டு உடலிலூத உத்தமனே யோகமென்று உரைத்திட்டேனே உரையான ததைக்கண்டால் ஞானமப்பா உத்தமனே புலஸ்தியனே உண்மைகேளு நிறையான ரூபமடா சத்தி சத்தி நேர்ந்தசபை சிவமாக நின்றுதையா மறையாத கணபதிகுண் டலியோகங்காரம் மண்பிரமண் மால் நீராம் வன்னிருத்ரன் குறையாத கால்மயே சுரன்விண் ணப்பா கூரான சதாசிவனாங் குறையைந்தாச்சே. அகத்தியர் பாடல்